ஒபதியா – யார் இந்த ஒபதியா?

ஒபதியா புத்தகத்தின் அறிமுகம்

ஒபதியா என்பது பழைய ஏற்பாட்டில் உள்ள பன்னிரண்டு சிறிய தீர்க்கதரிசன புத்தகங்களில் ஒன்றாகும்.

ஒபதியா புத்தகம் ஒரே ஒரு அதிகாரம் மட்டுமே கொண்டது. இதில் 21 வசனங்கள் உள்ளன.

ஒபதியா பற்றிய விளக்கம்

வேதாகமத்தில் ஒபதியாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அதிகமான விவரங்கள் கொடுக்கப்படவில்லை. அவருடைய குடும்பம், பிறந்த இடம், வாழ்க்கை வரலாறு போன்றவற்றைப் பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. ஆனால், அவர் மூலம் தேவன் கொடுத்த தீர்க்கதரிசன செய்தி மிகவும் முக்கியமானது.

ஒபதியா யாருக்கு தீர்க்கதரிசனம் உரைத்தார்?

ஒபதியாவின் தீர்க்கதரிசனம ஏதோம் தேசத்திற்கு எதிரான தேவனுடைய நியாயத்தீர்ப்பு ஆகும்.

ஏதோமியர்கள் ஏசாவின் சந்ததியினர்,. இஸ்ரவேலுக்கும் ஏதோமுக்கும் இடையே நீண்டகால பகை இருந்தது. எருசலேமுக்கும் யூதா மக்களுக்கும் துன்பம் ஏற்பட்ட காலத்தில், ஏதோம் ஜனங்கள் அவர்களுக்கு உதவாமல், அவர்களுடைய துன்பத்தைக் கண்டு மகிழ்ந்தனர். இதற்காக தேவன் ஏதோமை நியாயந்தீர்ப்பார் என்று ஒபதியா அறிவித்தார்.

ஏதோமின் பெருமை

ஒபதியா புத்தகத்தில் ஏதோமின் பெருமை மற்றும் அகந்தை. முக்கியமாக கண்டித்து எழுதப்பட்டுள்ளது

ஏதோம் மக்கள் தங்களுடைய மலைப்பகுதியும் பாதுகாப்பான இடங்களும் தங்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றும் என்று நம்பினர்.

வேத வசனம் ஒபதியா 1:3–4:

உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம்போக்குகிறது; கன்மலைப் பிளவுகளில் குடியிருக்கிறவனே, உன் வாசஸ்தலம் உயரத்திலிருக்கிறது; உன்னைத் தரையிலே இறக்குவான் யார் என்று உன் இருதயத்தில் சொல்லிக்கொள்கிறாய். நீ கழுகைப்போல உயரப்போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இந்த வசனம் மனுஷனுடைய அகந்தை தேவனுக்கு முன்பாக எம்மாத்திரம் அது நிலைநிற்காது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

கர்த்தருடைய நாள்

ஒபதியா புத்தகத்தின் மற்றொரு முக்கியமான செய்தி “கர்த்தருடைய நாள்” என்பதாகும்.

வேத வசனம்ஒபதியா 1:15:

கர்த்தருடைய நாள் சகல ஜாதிகளின்மேலும் சமீபமாயிருக்கிறது; நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கைக்கான பலன் உன் தலையின்மேல் திரும்பும்.”

மனுஷன் செய்யும் செயல்களுக்கு விளைவுகள் உண்டு என்பதை இந்த வசனம் வெளிப்படுத்துகிறது. தேவன் அநியாயத்தையும் தீமையையும் காணாமல் இருப்பதில்லை.

தேவனுடைய ஜனங்களுக்கு நம்பிக்கை:

ஒபதியா புத்தகம் நியாயத்தீர்ப்பைப் பற்றி மட்டும் கூறவில்லை. அதில் தேவனுடைய ஜனங்களுக்கு நம்பிக்கையும் மீட்பும் உள்ளது.

வேத வசனம் – ஒபதியா 1:17:

“சீயோன் மலையில் தப்பிப்பவர்கள் இருப்பார்கள்; அது பரிசுத்தமாயிருக்கும்; யாக்கோபின் வம்சத்தார் தங்கள் சுதந்தரங்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.”

தேவன் தம்முடைய ஜனங்களை கைவிடுவதில்லை என்பதையும், இறுதியில் அவருடைய திட்டம் நிறைவேறும் என்பதையும் இந்தப் பகுதி காட்டுகிறது.

புத்தகத்தின் இறுதி செய்தி

ஒபதியா புத்தகத்தின் இறுதி வசனம் மிகவும் முக்கியமானது:

வேத வசனம் ஒபதியா 1:21:

ராஜ்யம் கர்த்தருடையதாக இருக்கும்.”

இந்த வார்த்தைகள் ஒபதியா புத்தகத்தின் முக்கியமான முடிவுச் செய்தியாகும்.

மனுஷனுடைய ராஜ்யங்களும் அதிகாரங்களும் நிலையற்றவை. ஆனால் கர்த்தருடைய ராஜ்யம் என்றும் நிலைத்திருக்கும்.